
அவர், நிலைமையை எடுத்துச் சொல்லி விளக்கம் அளிப்பதற்காக ரோமுக்குப் போனார். யூதர்களின் வழிபாட்டு முறை என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவது. திடீரென்று அதை மாற்றச் சொல்வது முடியாத காரியம். ரோமானிய மன்னரின் மீது அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால் தொழுவதற்குரிய கடவுளாக அவரை எந்த யூதரும் ஏற்கமாட்டார்கள் என்பதைக் கொஞ்சம் சுற்றி வளைத்து ஒருவாறு தெரியப்படுத்திவிட்டார் ஆக்ரிப்பா-1.அவருடைய நல்லநேரம், ரோமானிய மன்னர் காலிகுலா, கோபமடையாமல், ஜுதேயாவின் தேவாலயங்களில் தன்னுடைய சிலையை வைத்துத் தொழவேண்டுமென்கிற அரசு உத்தரவைத் திரும்பப்பெற முடிவு செய்தார்.ஆனாலும் போராட்டத்தில் இறங்கியதால் கைதுசெய்யப்பட்ட யூதர்களை அவர் மன்னிக்கத் தயாராக இல்லை. அவர்கள் யாவரும் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டியவர்களே என்று நினைத்தார். அரசர் சொல்வதைக் கேட்டால் அது ராஜ விசுவாசம். கேட்க மறுத்தால் ராஜதுரோகம். ராஜதுரோகக் குற்றச்சாட்டுக்குத் தண்டனை என்றால், அது மரணம் மட்டுமே. இதனடிப்படையில் ஆயிரக்கணக்கான ஜுதேயா யூதர்கள் மரணத்தின் வாசலில் காத்திருந்தபோது, அவர்களுக்கு ஓர் அதிர்ஷ்டம் அடித்தது. தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, சற்றும் எதிர்பாராத வகையில் மன்னர் காலிகுலா அவரது அரசியல் எதிரிகளால் கொலை செய்யப்பட்டார். ரோமில் நிகழ்ந்த ஆட்சிமாற்றம், இங்கே இஸ்ரேல் யூதர்களின் உயிரைக் காப்பாற்றியது.இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, கி.பி. 66-ம் ஆண்டு வரை ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்த ஜுதேயா என்கிற இஸ்ரேலில் வேறெந்தப் பிரச்னையும் பெரிதாக எழவில்லை. சுதந்திர வேட்கையோ, தனிநாடு கோரிக்கையோ அவர்களிடம் இல்லை. பாலஸ்தீனப் பெருநிலத்திலிருந்த மற்ற சில நாடுகளும் கூட இப்படி ரோமானிய ஆளுகைக்கு உட்பட்டுத்தான் இயங்கின என்பதால் யாருக்கும் எதுவும் வித்தியாசமாகவே படவில்லை. ரோமானியர்கள், ஆளப்பிறந்தவர்கள். நாம் அடங்கி வாழவேண்டியவர்கள். இது இயல்பாக மக்கள் மனத்தில் ஊறிப்போயிருந்தது.கி.பி.66-ல்தான் அங்கே முதல்முதலில் ஒரு புரட்சி ஏற்பட்டது. புரட்சி செய்தவர்களும் யூதர்களே. ஜெருசலேமை முற்றிலுமாக ரோமானிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்து, ஒரு முழுமையான யூத சாம்ராஜ்ஜியத்தை அமைக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட அந்தப் புரட்சியை “ஸிலாட்” (ஞீமீணீறீஷீts) என்கிற அமைப்பினர் முன்னின்று நடத்தினார்கள். ஒட்டுமொத்த ஜெருசலேம் யூதர்களின் எண்ணிக்கையைப் பார்க்க, ஸிலாட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மையோர்தாம். அவர்களது புரட்சி, மக்களுக்கு சந்தோஷத்தைக் காட்டிலும் பயத்தையே தந்தது. ஏனெனில், அவர்கள் எதிர்ப்பது ஒரு சாதாரண தேசத்தையோ, குறுநில மன்னனையோ அல்ல. மாபெரும் ரோம சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியை எதிர்த்துப் புரட்சி செய்ய ஆரம்பித்திருந்தார்கள். இது நிச்சயம் அபாயகரமானது என்று கருதினார்கள்.ஆனால், புரட்சிக்காரர்கள் மிகச் சுலபமாக ஜுதேயா கவர்னரின் ராணுவத்தைச் சிதறடித்து ஜெருசலேமைக் கைப்பற்றிவிட்டார்கள். தவிர இஸ்ரேலின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளிலும் கணிசமான இடத்தை அவர்களால் ஆக்கிரமித்துவிட முடிந்தது. ஆனால், எப்படியும் ஒரு முழுமையான யூத அரசை நிறுவிவிட முடியும் என்று அவர்கள் கொண்ட நம்பிக்கை, அடுத்த ஒரு வருடத்தில் தரைமட்டமானது.இப்போது, ரோமானியப்படை முழு வேகத்தில் இஸ்ரேலின் மீது தாக்குதலை ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக இழந்த இடங்களை மீட்கத் தொடங்கியது.கி.பி. 70-ம் ஆண்டு அது நடந்தது. பிரளயம் வந்தது போல இஸ்ரேலுக்குள் நுழைந்த மாபெரும் ரோமானியப் படையன்று, இண்டு இடுக்கு விடாமல் அடித்து துவம்சம் செய்ய ஆரம்பித்தது. புரட்சி செய்த ஸிலாட் அமைப்பினர் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனார்கள். கோரதாண்டவம் என்பார்களே, அது! ஜெருசலேம் உள்பட புரட்சிக்காரர்கள் கைப்பற்றியிருந்த அத்தனை இடங்களையும் ஒட்டுமொத்தமாகக் கையகப்படுத்தியது ரோமானிய ராணுவம். ரோமானியச் சக்கரவர்த்தியின் மகனான டைடஸ் (ஜிவீtus) என்பவனே அப்போது ராணுவத் தளபதியாக வழிநடத்திக்கொண்டு வந்திருந்தான். தம்மை எதிர்த்த அத்தனை பேரையும் அவர்கள் கொன்றார்கள். தடுத்த சுவர்களையெல்லாம் இடித்தார்கள். கண்ணில்பட்ட கட்டடங்கள் அனைத்தையும் உடைத்து நொறுக்கினார்கள். சாலைகள் சிதைந்தன. குளங்கள் உடைந்தன. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்று அவர்கள் வித்தியாசம் பார்க்கவே இல்லை. கண்ணில் தென்பட்ட அத்தனை யூதர்களையும் கதறக் கதறக் கொன்று வீசினார்கள்.இந்தத் தாக்குதலின் உச்சகட்டம் ஜெருசலேம் நகரில் நிகழ்ந்தது. ஆ, அந்தக் கோயில்! இந்தக் கோயிலை முன்னிட்டு அல்லவா யூதர்கள், ரோமானியச் சக்கரவர்த்தியின் ஆணையை முதல் முதலில் எதிர்த்துக் கலகம் செய்தார்கள்? இதைத்தானே ஒட்டுமொத்த யூதர் குலத்துக்கே புனிதத்தலம் என்று சொல்லி, தம்பட்டம் அடித்துக்கொண்டார்கள்? அவர்களது ஆணவத்தின் அடையாளமல்லவா இது? இதன் பழம்பெருமைதானே அவர்களைத் திமிர் பிடித்து ஆடவைத்தது?இனி எக்காலத்துக்கும் யூதர்கள் புரட்சி என்று இறங்க நினைக்கக்கூடாதபடிக்குத் தாக்குதலை முழு வேகத்தில் நடத்தவேண்டும் என்று நினைத்தவர்கள், கோயிலை இடிக்க ஆரம்பித்தார்கள். தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அது தூள்தூளாகச் சிதறி, உதிர ஆரம்பித்தது. கதவுகள் பெயர்த்து எடுக்கப்பட்டன. அலங்கார விளக்குகள் உடைத்து நொறுக்கப்பட்டன. தூண்கள் இடிக்கப்பட்டன. மாடங்களில் தீவைத்தார்கள். முன்னதாக வெகு ஜாக்கிரதையாக உள்ளே இருந்த அத்தனை மதிப்புள்ள பொருள்களையும் சுருட்டி வாரி மூட்டைகட்டி ரோமுக்கு அனுப்பிவிட்டார்கள். அவற்றுள் முக்கியமானவை, கோயிலின் மிகப்புனிதமான பொருள்களாகக் கருதப்பட்ட தங்கத்தாலான பாத்திரங்களும், வேலைப்பாடுகள் மிக்க, பிரமாண்டமான தங்க மெழுகுவர்த்தித் தாங்கி (நிக்ஷீமீணீt விமீஸீஷீக்ஷீணீலீ என்பார்கள். சிணீஸீபீமீறீ ஷிtணீஸீபீ.) ஒன்றும். ரோமானியர்களின் படையெடுப்பை, படுகொலைகளைக் கூட யூதர்கள் அமைதியுடன் சகித்துக்கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் ஜெருசலேம் தேவாலயத்தை அவர்கள் தாக்கத் தொடங்கியதும், பொறுக்கமுடியாமல் எதிர்த்துப் போரிட வீதிக்குத் திரண்டு வந்தார்கள்.ஆனால், பிரமாண்டமான ரோமானியப் படையின் எதிரே ஜெருசலேம் யூதர்கள் வெறும் கொசு. கிட்டத்தட்ட பன்னிரண்டாயிரம் யூதர்கள் அந்தப் போரில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்கிறது வரலாறு. இதைத்தவிர, ஜெருசலேம் தேவாலயத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்த மதகுருக்களைத் தனியே நிற்கவைத்துக் கழுவிலேற்றினார்கள் ரோமானியர்கள்.ஜெருசலேம் நகரமே ஒரு மாபெரும் குப்பைத்தொட்டி போலக் காட்சியளித்தது. எங்கும் பிணங்கள். ரத்தம். இடிபாடுகளின் இடையே கேட்ட கதறல் ஒலிகள். வல்லூறுகள் வானில் வட்டமிட்ட வேளையில் கொள்ளையடித்த பொருள்களை மூட்டைகட்டிக்கொண்டு ரோமானியப்படை ஊருக்குத் திரும்ப ஆரம்பித்தது.இரண்டாவது முறையாகக் கட்டப்பட்ட அந்த ஆலயம் மீண்டும் இடிக்கப்படும் என்று முன்னரே யூகித்துச் சொன்ன இயேசுவைத்தான் அப்போது ஜெருசலேம் நகரத்து யூதர்கள் நினைத்துப்பார்த்தார்கள்.கிறிஸ்தவத்தின் மீதான அவர்களது வெறுப்பு இன்னும் பல மடங்காக உயர ஆரம்பித்தது.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 9 டிசம்பர், 2004
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது