அதிரை வானில் அதிசயம்.. என்ன அது? ரயில் மாதிரி -

Editorial
0

அதிராம்பட்டினம் உட்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக வானத்தில் ஒளிரும் ரயில் போன்ற தோற்றம் நேற்று மாலை திடீரென தெரிந்துள்ளது. இது குறித்து பலர் சமூக வலைத்தளங்களில் படங்களை பகிர்ந்து கேள்வியெழுப்பியுள்ளனர்.

இது எலான் மஸ்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள்கள் என்றும் சிலர் கூறி வருகிறார்கள். ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் கிடைக்கவில்லை. 10 விநாடிகள் மட்டுமே தோன்றி மறைந்த இந்த நகரும் நட்சத்திரங்கள் போன்ற காட்சிகளை பலரும் வியந்து பார்த்துள்ளனர்.

இரவில் வெறும் கண்களால் வான்வெளியில் நமக்கு தெரிவது எரிகற்கள், மற்றும் வால்மீன்கள்தான். இதைக் கடந்து சில நேரங்களில் கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதையும் பார்க்க முடியும். இவ்வாறு இருக்கையில் நேற்றிரவு திடீரென வானில் நட்சத்திரங்கள் நகர்வதை போன்ற காட்சியை சிலர் பார்த்திருக்கின்றனர். பார்ப்பதற்கு ரயில் நகர்வதைப் போல இருந்ததாக சிலர் சமூக வலைத்தளங்களில் அதற்கான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர்.

சென்னை உள்ளிட்ட சில வட மாவட்டங்களில் மேக மூட்டம் காரணமாக இது சரியாக தெரியவில்லை. ஆனால், கோவை, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட உள் மற்றும் தென் மாவட்டங்களில் இதனை பலரும் பார்த்திருக்கின்றனர். அதிகபட்சமாக 10 விநாடிகள் மட்டுமே தெரிந்த இந்த காட்சியை பலர் செல்போனில் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கேள்வியெழுப்பியுள்ளனர். இது எலான் மஸ்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள்களின் தொகுப்பு என்று சொல்லப்படுகிறது.

'ஸ்டார்லிங்க்' என்பது பூமியில் உள்ள தொலைதூர பகுதிகளுக்கும் அதிவேக இணைய வசதியை கொடுக்க உருவாக்கப்பட்ட அதிநவீன செயற்கைக்கோள்களாகும். கடந்த 2015ம் ஆண்டிலிருந்து 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் இதனை விண்ணில் செலுத்தி வருகிறது. தற்போது வரை 13 தொகுதிகள் மூலம் 775 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இது சூரிய சக்தி மூலம் இயங்கி வருகிறது. இது வெறும் சாம்பிள்தான். 12,000 தொகுதிகளை விண்ணில் செலுத்த 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 42,000 செயற்கைக் கோள்கள் பூமியை சுற்றி வர இருக்கிறது.

இவ்வாறு செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டால் தினமும் வானில் பறக்கும் ரயில்களை காணலாம். ஆனால் இது பல சிக்கல்களை உருவாக்கும் என்று வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது, தற்போது 5,000 செயற்கைக் கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன. இதில் கூடுதலாக 42,000 சேர்ந்தால் எப்படி இருக்கும்? பூமியிலிருந்து விண்வெளியை ஆய்வு செய்பவர்களுக்கு இது பெரும் தொந்தரவாக அமையும். இதனால் முன்கூட்டி நடக்க இருக்கும் விண்கல் மோதல் போன்றவற்றை நம்மால் கணிக்க முடியாமல் போகலாம்.

புதிய கிரகங்கள், நட்சத்திரங்களை கண்டுபிடிக்க முடியாமல் இந்த செயற்கைக்கோள்கள் இடையூறு ஏற்படுத்தும் என்று வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், அதிக எண்ணிக்கையில் இது இருப்பதால் ஒன்றோடு ஒன்று மோதி space debris எனப்படும் விண்வெளி குப்பைகளை உருவாக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)