நேற்று ஜெயலலிதாவிற்கு வழங்கபட்ட தீர்ப்பு காலம்கடந்து வந்திருந்தாலும் சரிந்துகொண்டிருந்த இந்திய சட்டத்தின் மதிப்பை சிறிது கூட்டியது.
தீர்ப்பின் விளைவு:-
இந்த தீர்ப்பு அதன் எதிர்கட்சியும் எதிரி கட்சியுமான திமுகவிற்கு கூட அதிகப்படியான சந்தோசத்தை ஏற்படுத்தவில்லை அதற்கு காரணம் அடுத்து நாம்தான் என்பதாலோ என்னவோ?
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த வரை அக்கட்சிக்கு ஜால்ரா சால்ஜாப்பு செய்து திமுகவுக்கு எதிரான வழக்குகளின் தீவிரத்தை குறைத்தார் கலைஞர்.
அதேபோல் மூன்று வருஷமாக முயற்சி செய்து மங்கள்யான் விண்கலத்தை நிலைநிறுத்தியதற்கு, ஆட்சிக்கு வந்து நூறுநாள் ஆன பாஜகவின் மோடியை வாழ்த்தினார் கலைஞர்.
காங்கிரஸ் மீது ஏற்பட்ட பிணக்கமும் திமுக மீதுள்ள ஊழல் வழக்குகள் மீதான பயத்தையே இது காட்டியது.
இவ்வாறாக அதிமுக, மோடி ஆட்சிக்கு மங்களம் பாடியிருந்தால் ஒருவேளை ஜெயலலிதா மீதான தீர்ப்பு இன்னும் சிலகாலத்திற்கு தள்ளிபோயிருக்கலாம்.
இத்தீர்ப்பினால் மற்ற எல்லா கட்சியை விடவும் சந்தோசத்தோடு அதிக எதிர்பார்ப்பை
எதிர்பார்ப்பது பாஜக வே. காரணம் மதவெறியூட்டும் விஷம பிரச்சாரத்தினால்
கலவரங்களை ஏற்படுத்தி அதில் குளிர்காய்ந்து வடமாநிலங்களில் கோலோச்சிய சங்பரிவார கட்சியும்,இயக்கங்களும் தமிழ்நாட்டில் தலையெடுக்க முடியாமலே போயின. அதற்கு தடையாய் திராவிட இயக்கங்கள், தமிழின அமைப்புகள்,சில கட்சிகள் இருந்தாலும் மிகப்பெரும் தடையாக திமுக,அதிமுக இருந்தன.
தேர்தல்களும் திராவிட கட்சிகளும்:-
முன்கால தேர்தல்களில் மத்தியில் ஆட்சி கூட்டுக்காக பாஜகவை திமுக, அதிமுக ஆதரித்தாலும்,, மாநில அரசியலில் தேசிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி தங்களையே மக்கள் மத்தியில் முன்னிலைபடுத்திக்கொண்டனர். அதனால்தான் காமராஜர்,மூப்பனாருக்கு பிறகு காங்கிரஸ் கட்சி பலமிழந்தும், பாஜக தமிழ்நாட்டில் அட்ரஸே இல்லாமலும் போயின.
இதில் பலராலும் ஒரு மாற்றாக எதிர்பார்கபட்ட தேமுதிக திறமையான தலைமையின்மையாலும், தெளிவான எதிர்கால சிந்தனையின்மையாலும் மக்களால் மறக்கபட்டனர்.
தமிழ்நாட்டு அரசியலில் திமுக, அதிமுகவுக்கு மாற்றே இல்லை எனும் நிலையில் சட்டமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைத்த திமுக, அதிமுக அணியிடம் மண்ணை கவ்வியது. அதற்கு பிறகான பாராளுமன்ற தேர்தலில் திமுக சில கட்சிகளோடு கூட்டணியும், மூன்றாவது பலமான மாநில கட்சியாக கருதப்பட்ட தேமுதிகவோடு இன்னும் சில கட்சிகளையும் ஒன்றிணைத்து மிக பலமான கூட்டணியுடன் பாஜக களமிறங்கியது.
ஆனால் அதிமுக தனித்தே போட்டியிட்டது. அந்த தேர்தலில் தன் தகிடுதத்தங்களால் வடநிலங்களில் மோடி தலைமையிலான பாஜக அரசு பெரும்பான்மையாய் வெற்றிபெற்றாலும் தமிழக அளவில் ஒரேஒரு Mp தொகுதியையே தேசியகட்சியான பாஜகவால் கைபற்ற முடிந்தது.
பெருவாரியான தொகுதிகளை அதிமுக கைபற்றி தன்னை தமிழகத்தில் அசைக்க முடியாத கட்சியாக வெளிப்படுத்தியது.
இது பாஜகவுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.
அண்ணண் எப்போ சாவான்?திண்ணை எப்போ காலியாகும்? என்று சங்பரிவார இயக்கங்கள் தமிழகத்தை நோக்கி தன் பார்வையை செலுத்திக்கொண்டிருந்த வேளையில்தான் ஜெயலலிதாவின் தீர்ப்பு பற்றிய செய்தி இனிப்பாக வந்திறங்கியது சங்பரிவாரங்களுக்கு.
சிலநாட்களுக்கு முன்னர் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுகவே வெற்றிபெறும் என உணர்ந்து மாநிலகட்சிகளே தேர்தலைவிட்டு விலகிவிட்டவேளையில் பாஜக போட்டியிட்டது. அடிக்கிறார்கள்,வேட்பாளர்களை விலைக்கு காங்குகிறார்கள் என அதிமுக மீது பலபுகார்கள் அளித்து பாஜக கூவிய போதிலும் அதிமுகவே பெருபான்மையிடத்தில் வென்று பாஜகவின் முகத்தில் கரியை பூசியது. எனினும் அதிமுகவிற்கு அடுத்து தமிழகத்தில் சக்திவாய்ந்த கட்சி பிஜேபிதான் என வெட்கமே இல்லாமல் தமிழிசை புழுகும்போதே சந்தேகம் எழுந்தது. ரஜினி புதிய கட்சி தொடங்கபோவதாக வந்த செய்தி, தமிழகத்தில் பிஜேபியே அதிமுகவிற்கு எதிரான மாற்று சக்தி என்ற செய்திகளுக்கும், 18 வருடமாக இழுத்தடிப்புடன் நடைபெற்ற ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கும் தொடர்பு இருப்பதாகவே அரசியல் விமர்சகர்களுக்கு படுகிறது.
இந்த தீர்ப்பை வைத்து திமுகவை பயம்காட்டி, அதிமுகவை டம்மியாக்கி தமிழகத்தில் கால்பதித்துவிடலாம் என்ற சங்பரிவாரங்களின் பகல்கனவை முறியடிக்க, இனியாவது நேர்மையாக நடந்து மக்களிடம் நன்மதிப்பை பெற மாநிலகட்சிகள் முற்படுவதும், தமிழ்,தமிழர்,திராவிடம்,தமிழ்தேசியம் பேசும் கட்சிகளும் இயக்கங்களும் தங்களுக்குள் சண்டையிடாமல் விழிப்போடு இருக்க வேண்டும்.
மக்களை பிரிக்க நினைக்கும் கட்சிகளை இனம்கண்டு தமிழகத்தில் கால்பதிக்கவிடாமல் தன் வாக்குகளால் துரத்துவது தமிழகமக்களின் கடமையும்கூட !
நடக்குமா?
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது