தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்று உள்ளன.
தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் முன்பு திருவோணம், ஒரத்தநாடு, தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், வலங்கைமான் (தனி) ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம்பெற்று இருந்தன. தொகுதி மறுசீரமைப்புக்கு பின், திருவோணம், வலங்கைமான் ஆகிய இரு தொகுதிகளில் இருந்த பகுதிகள் வேறு தொகுதிகளில் சேர்க்கப்பட்டு விட்டன. இதையடுத்து, ஏற்கனவே புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியில் இருந்த பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டசபை தொகுதிகள் தஞ்சை பாராளுமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும், பாபநாசம் சட்டசபை தொகுதி தற்போது மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக நாகை தொகுதியில் இருந்த மன்னார்குடி தொகுதி தற்போது தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 2009–ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் 4 லட்சத்து 8 ஆயிரத்து 343 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து ம.தி.மு.க. சார்பில் (அ.தி.மு.க. கூட்டணி) போட்டியிட்ட துரை.பாலகிருஷ்ணனுக்கு 3 லட்சத்து 6 ஆயிரத்து 556 வாக்குகள் கிடைத்தன. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் 1 லட்சத்து ஆயிரத்து 787 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் இடம்பெற்றுள்ள 6 சட்டசபை தொகுதிகளும் தற்போது எந்தெந்த கட்சிகள் வசம் உள்ளன? அவற்றின் எம்.எல்.ஏ.க்கள் யார் என்ற விவரம் வருமாறு:–
ஒரத்தநாடு–ஆர்.வைத்திலிங்கம்

(அ.தி.மு.க.)
தஞ்சாவூர்– எம்.ரெங்கசாமி (அ.தி.மு.க.)
திருவையாறு–எம்.ரெத்தினசாமி
(அ.தி.மு.க.)
மன்னார்குடி– டி.ஆர்.பி.ராஜா (தி.மு.க.)
பட்டுக்கோட்டை– என்.ஆர்.ரங்கராஜன்
(காங்கிரஸ்)
பேராவூரணி–அருண்பாண்டியன்
(தே.மு. தி.க)
13 லட்சம் வாக்காளர்கள்
தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 13 லட்சத்து 10 ஆயிரத்து 160. இவர்களில் ஆண்கள் 6 லட்சத்து 48 ஆயிரத்து 166 பேர். பெண்கள் 6 லட்சத்து 61 ஆயிரத்து 994 பேர். இதர பிரிவினர் 9. ஆண்களை விட 13 ஆயிரத்து 828 பெண் வாக்காளர்கள் அதிகம்.
கடந்த பாராளுமன்ற தேர்தலைவிட 2 லட்சத்து 67 ஆயிரத்து 351 வாக்காளர்கள் கூடுதலாக வாக்களிக்க உள்ளனர்.
தஞ்சை தொகுதி விவசாயம் சார்ந்த பகுதி. விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகம். மீனவர்கள், பட்டு நெசவுத் தொழிலாளர்களும் கணிசமாக உள்ளனர். பெரும்பான்மை கள்ளர் சமூகத்தினர். இதற்கு அடுத்து ஆதிதிராவிடர்கள். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் கணிசமாக உள்ளனர்.
தஞ்சாவூர் தொகுதி 1957 முதல் 2009–ம் ஆண்டு வரை 15 பொதுத் தேர்தல்களையும், ஒரு இடைத்தேர்தலையும் சந்தித்து இருக்கிறது. இதில் 7 முறை காங்கிரசும், 7 முறை தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு முறை அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. 1996 முதல் தொடர்ந்து நடைபெற்ற 5 தேர்தல்களிலும் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
தஞ்சை தொகுதியை பொறுத்தவரை இது விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்கு வேளாண்மை பல்கலைக்கழகம், தஞ்சை– பட்டுக்கோட்டை– மன்னார்குடி– நீடாமங்கலம் வழியாக ரெயில் பாதை, தஞ்சை– அரியலூர் அகல ரெயில் பாதை திட்டம், தஞ்சை விமான நிலையத்திற்கு உள்நாட்டு விமானம் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என வேட்பாளர்கள் வாக்குறுதிகளாக அளித்தனர்.
இதில் மன்னார்குடி– நீடாமங்கலம் ரெயில் பாதை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மற்ற திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை.
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. பேட்டி
இது குறித்து எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி.யிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
திருச்சி– நாகை, அரியலூர்– மானாமதுரை, விக்கிரவாண்டி– தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, திருச்சி– மானாமதுரை அகல ரெயில் பாதை பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தேன். கல்லணை கால்வாய் ரூ.200 கோடியில் புனரமைக்கப்பட்டது. ரூ.200 கோடியில் தேசிய பயிர் பதன ஆராய்ச்சி நிலையம் தஞ்சையில் தொடங்கப்பட்டது. ஒரத்தநாட்டில் அரசு மகளிர் கல்லூரி, ராஜாமடத்தில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது. தஞ்சை விமான நிலையத்திற்கு உள்நாட்டு விமானங்கள் வந்து செல்லும் வகையில் ஓடுதளம் தயார் நிலையில் உள்ளது.

தற்போது விமானப்போக்குவரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதால் இங்கு விமானம் இயக்கப்படவில்லை. தஞ்சை மோத்திரப்பசாவடி மேம்பாலம், பூண்டி– செங்கரையூர் மேம்பாலம் கட்டப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாக தஞ்சை தொகுதியில் பயிர்க்கடன், கல்விக்கடன் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுத்தேன். உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் தஞ்சையில் இருந்து இயக்க நடவடிக்கை எடுத்தேன். நான் 5 முறை எம்.பி.யாக இருந்த காலத்தில் ரூ.50 கோடி செலவில் பள்ளி, கல்லூரிக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தஞ்சை–பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை– மன்னார்குடி, தஞ்சை– அரியலூர் அகலப்பாதைக்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றி யாருக்கு?
தஞ்சை தொகுதியை பொறுத்தவரை இங்கு தொடர்ந்து 5 முறை தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது. இதனால் இந்த முறையும் தொகுதியை தி.மு.க.வினர் கைப்பற்ற தயாராகி வருகின்றனர். இதே போல் வரலாற்று சாதனையாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவியையும், 3 நகராட்சி தலைவர் பதவியையும், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவியையும், தஞ்சை எம்.எல்.ஏ. தொகுதியையும் அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது. இதனால் எம்.பி. தொகுதியையும் இந்த முறை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்புடன் அ.தி.மு.க.வினர் செயல்பட்டு வருகிறார்கள்.
முக்கிய பிரச்சனை:
காரைக்குடி–திருவாரூர் அகல ரெயில் பாதை பணியை உடனே தொடங்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் விருப்பம். தஞ்சை தொகுதியை பொறுத்தவரை காவிரி நீர் பிரச்சினை தான் முக்கிய பிரச்சினையாக உள்ளது.
குறிப்பு: தினத்தந்தியில், நம் தொகுதி குறித்து வெளியான தொகுதிக் கண்ணோட்டத்தை நம் வாசகர்கள் அறிந்துக்கொள்ளும் விதமாக நம் தளத்தில் பதிகிறோம்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது