புலிகளும் புள்ளிமானும் ! பாலியல் வன்கொடுமைகள் - ஓர் பார்வை !

0
தொடரும் பாலியல் குற்றங்கள் ."நகரம் முதல் கிராமம் வரை" ."5 முதல் 80 வயது மூதாட்டி வரைக்கும்" பாலியல் சம்பவங்களால் பலியாகும் பரிதாபம். டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்தது, நாடெங்கும் பரப்பரப்பான விவாதங்களை உருவாக்கியது அரசியல்கட்சிகள், பொதுநல அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் என பலவும் நாடெங்கும் போராட்டத்தில் குதித்தன.. பாலியல் கொடுமை புரிவோருக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் இவைகள் அரசை நிர்ப்பந்தித்து வருகின்றன.
ஏதோ- இப்போதுதான் இதுபோன்ற கொடுமைகள் பரவலாக நிகழ்கிறது போன்ற ஒரு தோற்றத்தை ஊடகங்கள் ஏற்படுத்துகின்றன. இது உண்மையல்ல. பெண்களுக்கு எதிரான கொடிய அடக்குமுறைகள் காலாகாலமாக இந்தியாவில் நடந்து வருகின்றன. உதாரணமாக 1996-1998- ம் ஆண்டுக்கான தேசிய குற்றவியல் பதிவு அலுவலகம் வெளியிட்ட ஒரு புள்ளி விவரப்படி.
excel
என்று கணக்கீடு சொல்கிறது. இதுபோக பெண்கள் தேசிய ஆணைக்குழு வழங்கியுள்ள ஒரு அறிக்கையின்படி இந்தியாவில் 26 நிமிடத்திற்கு ஒரு தடவை பெண் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகிறாள். 54 நிமிடத்திற்கு ஒரு தடவை கேலிக்கும், கிண்டலுக்டகும் உள்ளாகிறாள். 10 நிமிடத்திற்கு ஒரு தடவை பெண் வரதட்சணைக் கொடுமையால் கொளுத்தப்படுகிறாள். 4 நிமிடத்திற்கு ஒரு தடவை ஒரு பெண் கடத்தப்படுகிறாள்.
தாய்நாட்டையே 'பாரத மாதா' என்று அன்னையின் பெயரால் உருவகித்து அழைக்கும் நமது பாரத மணித்திருநாட்டில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் வருந்ததக்க பட்டியல் இது. இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பது பட்டியலை பார்த்தாலே எவருக்கும் தெரியும். இன்று ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இந்தப் பட்டியலின் ஏறுமுகம் நமக்கு நிச்சயம் அதிர்;ச்சியளிப்பதாகத்தான் இருக்க முடியும்.
delhi
இதற்கான காரணங்களை நாம் வகைப்படுத்தும்போது அரசை மட்டுமே குற்றம் சொல்வதில் பயனில்லை. பெண்கள் மட்டுமல்லாது- இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பு தருவது அரசின் பொறுப்புதான், கடமைதான் என்ற போதும், நமது இந்திய மனங்களில் 'பெண்கள்' குறித்து காலகாலமாக கட்டமைத்து வந்திருக்கும் பதிவான சில 'பிம்பங்களும்' இதற்கு ஒரு முக்கிய காரணம்.
பொது சமூகத்தில் ஆண்களும், பெண்களும் இரண்டறக் கலந்து பழகும் மேலைச்சமூகங்களில் இதுபோன்ற வன்கொடுமைகள் அதிகம் நிகழ்வதில்லை. (அதற்காக மேலைப்பண்பாடு சிறந்த ஒன்று என நாம் கூற வரவில்லை.) இந்திய பழமைவாத சமூகம் பெண்கள் குறித்து இயல்பிலேயே அவளை ஒரு மனித உயிரியாகக் கூட எண்ணுவதில்லை. சமையல் கட்டிலும், கட்டிலுக்கும் மட்டுமே உபயோகமானவள் பெண் என்பதே நமது சமூகத்தில் நிலவி வந்திருக்கும் பண்பாடு. இதைக் கருத்தில் கொண்டே இன்று பெண்கள் மீது ஏவப்படும் பலாத்காரம் குறித்து சிந்திக்க வேண்டும்.
1970-ல் காத் மில்லத் என்பவர் 'பாலுணர்வு அரசியல்' என்று ஒரு நூல் எழுதினார். அதில் அவர் இவ்வாறு கூறுகிறார்.
'ஆண்-பெண் என்ற பால்வேறுபாடு உயிரியல் அடிப்படையில் இயற்கையாகவே அமைவது. ஆனால் ஆண்மை, பெண்மை என்ற சமூக வேறுபாடு அந்தந்த சமூகத்தின் பண்பாட்டு பின்னணியில் வந்து போவது'.
இந்தக் கருத்து நமது இந்திய சமூகத்தில் மிக ஆழமாக வேறூன்றப்பட்டுள்ளது. பெண் என்றால் இங்கு 7வயது சிறுமியும் கூட பெண் தான். அதனால்தான் பால்முகம் மாறாத சிறுமி புனிதா ஒரு கயவனால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு இங்கு கொல்லப்பட்டாள்.
நிறைய இந்தியக் குடும்பங்களில் பெண் அவளது நெருங்கிய உறவினர்களாலே பலாத்காரம் செய்யப்படுகிறாள். நமது இந்திய சமூகத்தில் நிலவி வரும் ஒரு கேவலமான பழமொழியைக் கொண்டு இதை நிரூபிக்கலாம்;.
'அண்ணன் பொண்டாட்டி அரைப்பொண்டாட்டி'
'தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி'
மிக வேதனையுடன் தான் இதை இங்கு பதிவு செய்கிறோம். ஒரு குடும்பத்தில் திருமணமான அண்ணனோ, தம்பியோ இறந்துவிடும்போது விதவையான அவர்களது இல்லக்கிழத்தி கௌரவத்துடனும், பாதுகாப்புடனும் வாழ முடியாது என்பதையே இத்தகு சொல்வடைகள் குறிப்பில் உணர்த்துகின்றன. திருமணமான பெண்ணின் நிலையே இது என்றும் போது, கன்னிப்பெண்களின் நிலை குறித்து சொல்ல வேண்டியதில்லை.
'இந்தியா வளர்ச்சியடைந்து வரும் ஒரு நாடு' என நாம் பெருமை பேசிக் கொள்வதில் ஒன்றும் குறைவில்லை.
செல்வ வளத்திலோ அல்லது பொருள் உற்பத்தியிலோ அல்லது இன்றும் வேறுபல துறைகளிலோ வளர்ந்து வருவதை மட்டும் முன்வைத்து ஒரு நாடு வளர்ச்சியடைந்த நாடு என்று கணக்கிடப்படுவதில் பொருள் இல்லை. மாறாக குற்றங்கள், வன்முறைகள் குறைந்த நாடே வளர்ந்துவரும் நாடு என பொருள் கொள்ள வேண்டும். அப்படிப் பார்த்தால் இன்று அரபு தேசங்களையே வளர்ந்து வரும் நாடு என பொருள் கொள்ள வேண்டும். அங்கு குற்றங்களே நடக்கவில்லை என்பதல்ல. நடைபெறும் குற்றச் செயல்களின் சதவீதம் மிகக் குறைவு. அதற்கு அந்நாடுகளில் அமுல்படுத்தப்படும் கடுமையான தண்டனைச் சட்டங்களே காரணம்.
பெண் என்பவள் போகப் பொருள் அல்ல, கட்டிலுக்கு மட்டுமே உரியவள் அல்ல என்கிற வாதங்கள் மிகச் சரியானவைதான்.
ஆனால் இறைவனின் படைப்பில் 'பெண்' எப்போதுமே எதிர்பாலினம் தான். அவளிடம் எப்போதுமே ஆண்களுக்கு ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். இந்த உயிரியல் நியதியைக் கணக்கில் கொள்ளாமல் வெற்றுக் கோஷங்கள் போடுவதால் எந்தப் பயனும் இல்லை.
பெண்கள் உடுத்தும் அரைகுறை ஆடைகள், தங்களை அலங்கரித்துக் கொண்டு பிற ஆடவர்; முன் கவர்ச்சியாகத் தோன்றுவது இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் நடைபெற மிக முக்கியமான தூண்டுகோல்.
மிக நேர்த்தியாக, முழுமையான ஆடை அணிந்திருக்கும் ஒரு பெண் கூட பொதுவெளியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் முறையில் பிற ஆண்களின் கவனத்தை ஈர்க்க வாய்ப்புள்ளது.
(அந்த டெல்லி பெண்கூட சினிமா பார்த்து விட்டு தனது ஆண் நண்பனுடன் பேருந்தில் வந்த போதுதான் அந்தக் கொடுமை நடந்துள்ளது).
அப்படியானால், ஒரு வயது வந்த பெண், ஒரு அந்நிய ஆடவனோடு ஊர் சுற்றலாமா? ஒழுக்க மீறல்கள் இங்கிருந்தல்லவா ஆரம்பமாகின்றன? நாகரீகம் என்ற பெயரிலும், பெண் சுதந்திரம் என்ற பெயரிலும் இதை அனுமதித்து விட்டு, குற்றங்கள் நடக்கும் போது கூச்சல் போடுவதால் என்ன லாபம்?
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்போதைய துணைவேந்தர் பெண்கள் சேலை மட்டும் தான் அணிந்துவரவேண்டும் என்று கூறியதற்கு பெண் உரிமை இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இன்று மதுரை ஆதீனம் போன்றவர்கள் இஸ்லாமிய பெண்கள் போன்று பிற பெண்களும் பர்தா அணிந்து வெளியே வரவேண்டும் என்று கூறியதற்கும் 'இந்திய ஜனநாயக மாதர்சங்கம்' போன்ற இடதுசாரி பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதைத்தான் உயிரியல் ரீதியான ஆண்/பெண் வேறுபாட்டை அதன் சரியான பொருளில் தெரிந்து கொள்ளாமல் 'வெற்றுக்கோஷம்' போடுபவர்கள் என முன் பத்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
பெண்ணினுடைய அங்கங்கள் வெளித்தெரிவதாலேயே, அந்தப் பெண்ணுக்கு ஒரு தொந்தரவு நிகழ்கிறது எனில், அதை மூடச் சொல்வதில் என்ன தவறு? அதைத்தானே ஆதீனம் சொல்கிறார்.?
நபிகளார் கூறுகிறார்கள்.
'அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் மஹ்ரம் (உற்ற ஆண்துணை) இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பாள்' (அஹ்மத்).
'உங்களில் ஒருவர் மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்' (புகாரி, முஸ்லிம்)
இதுபோன்றே அந்நிய பெண்களை இச்சையுடன் பாhப்பவர்கள் இருக்கிறார்கள். இந்த இச்சை என்பது உயிரியல் ரீதியாக இயல்பானது. ஆனால் ஒழுக்க ரீதியாக தவறானது. எனவே தான் இறைமறை.
'பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்திக் கொள்ளுமாறும்' பணிக்கிறது. (அல்குர்ஆன் 24:30,31)
'அலீயே....! ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல' (அஹ்மத், அபூதாவூத்)
'அந்நியப் பெண்களைக் கண்டு உங்கள் மனதில் சஞ்சலம் தோன்றினால் உங்கள் மனைவியரிடம் செல்லுங்கள்' (முஸ்லிம்)
ஆண்களிடமும், பெண்களிடமும் வெட்க உணர்வும், பெண்களுக்கே இயல்பான நாண உணர்வும் பெண்களிடம் அருகிவிட்ட காலம் இது. யாருக்கு வெட்க வேண்டுமோ அவர்களுக்கு வெட்குவதில்லை.
நபிகளார் கூறினார்கள்.
ஒவ்வொரு மார்க்கத்திலும் ஒரு சிறப்பு உண்டு. எனக்கு அருளப்பட்ட இந்த மார்க்கத்தின் சிறப்பு வெட்க உணர்வு 'வெட்கமும் ஈமானில் ஒரு பகுதி' – என்றார்கள்.
'வெட்கமும் ஈமானும் இணைந்தே வருகின்றது. வெட்கம் இல்லாதவனுக்கு ஈமான் இருக்காது. ஈமான் இல்லாதவனுக்கு வெட்கம் இருக்காது' என்றார்கள்.
குடும்பரீதியாக பாலியல் தொந்தரவு ஏற்படுவதற்கு இதுபோன்ற வெட்க உணர்வு அற்றுப்போனதும் ஒரு காரணம்.
நபிகளாரிடம் ஒரு பெண்மணி வந்து 'எனது கணவனின் சகோதரனைத் தனிமையில் சந்திக்கலாமா?' என்று கேட்டதற்கு 'அது மரணத்திற்கு சமம்' என்றார்கள்.
சிறிது நாட்களுக்கு முன்பு பாண்டிச்சேரியில் பார்வதிஷா என்ற மார்வாடிப் பெண்ணை அவரது கணவரின் சகோதரர்களே கற்பழித்துக் கொன்ற சம்பவம் நம்மில் பலருக்கும் மறந்து போயிருக்கலாம்.
பெண்களும் உயிர்கள் தான். இந்த உலகில் வாழ ஒரு ஆணுக்கு என்னென்ன தகுதிகள், விருப்பங்கள் உண்டோ அவை அனைத்தும் பெண்களுக்கும் உண்டு. ஆனால், இயற்கை நியதி காரணமாக பெண்கள் தங்களை தற்காத்து கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். அந்நிய ஆடவர்களின் தவறான, காமப் பார்வையில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளக் கூடிய அபயச்சூழல் அவர்களுக்கு உண்டு. அதற்கு ஒரே வழி தங்களது உடல் பாகங்கள் வெளித்தெரியாமல் மறைப்பதுதான்.
'ஹிஜாப்' (பர்தா) அணிவது இதற்கு அருமையான தொடு மாற்றுவழி. பர்தாவை இன்றுமொரு உடை என நினைத்தால் நாம் தவறு செய்தவர்கள் ஆவோம். இயல்பாக என்றும் உடுத்தும் உடை நம் உடலை மறைக்கலாம். ஆனால் 'பர்தா' நம் உடலை மறைப்பதோடு, நமது ஒழுக்கத்திற்கும் அரணாக இருக்கிறது.
ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்.
நபிகளார் இறந்தபின் ஆயிஷா (ரலி) வீட்டில் அடக்கம் செய்யப்பட்டார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களும் ஆயிஷா (ரலி) வீட்டிலேயே அடக்கம் செய்யப்பட்டார்கள் உமர் (ரலி) அவர்களும் அப்படியே அடக்கம் செய்யப்பட்டார்கள்.
ஆனால் உமர் (ரலி) அவர்கள் அந்நியர் என்பதால் வெட்கத்தின் காரணமாக, நான் எனது ஆடையை இறுக்கிகட்டியவாறே தவிர, ஒருநாளும் என் வீட்டில் நுழைந்ததில்லை' என்றார்கள்.
அதுபோல உம்மு ஜுபைர் என்ற ஸஹாபிப் பெண்மணி நபிகளாரிடம் 'யா ரசூலுல்லாஹ் எனக்கு காக்கா வலிப்பு நோய் வருகிறது. எனக்காக இறைவனிடம் துஆ செய்யுங்கள்' என்று வேண்டியபோது.
'முடிந்தவரை பொறுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் சுவனம் செய்வீர்கள், நீங்கள் விரும்பினால் உங்களுக்காக துஆ செய்கிறேன்' என்றார்கள். அதற்கு அந்த பெண்மணி 'வலிப்பு வரும்போது எனது ஆடைகள் கரண்டைக்காலுக்கு மேல் உயர்கின்றன. அதற்காக மட்டும் தாங்கள் துஆ செய்தால்போதும். மற்றவைகளை நான் பொறுத்துக் கொள்வேன்' என்றார்களாம்.
ஆனால் இன்று முழங்கால் அல்ல. முட்டுக்கால் வெளித்தெரிய நவநாகரீகப் பெண்கள் ஆடை அணிந்து வெளிச் செல்வதைப் பார்க்கிறோம். தங்களது அழகை வெளிப்படுத்திக் கொள்வதன் மூலம் தங்களைத் தாங்களே துன்பத்திற்கு உள்ளாக்கிக் கொள்கிறார்கள். எனவேதான் பெரும்பாலான பலாத்கார வழக்குகள் போதிய ஆதாரபலமின்றி தள்ளுபடியாகி விடுகின்றன.
'சக்ஷி' என்ற பெண்கள் அமைப்பு எடுத்த ஒரு புள்ளிவிபரப்படி 'இந்தியாவில் 64% நீதிபதிகள் பெண்கள் மீது ஏவப்படும் வன்முறைகத் தாக்குதலுக்குக் காரணம் பெண்களே என்ற கருத்தை தான் கொண்டிருக்கிறார்கள். மேலும் ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் ஒரு கற்பழிப்பு நிகழ்வு நடந்து விட முடியாது என்ற எண்ணம் கொண்டவர்களாகவும் உள்ளனர்.
இதையே நமது கிராமப்புறங்களில் 'ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது' என்பார்கள்.
இது பெண்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளும் ஒரு பார்வை இதன் விரிவான பொருள் என்னவெனில், ஒரு பெண் தனது நாணமற்ற செயல்களால், ஒரு ஆணின் காம உணர்வைத் தூண்டுகிறாள் என்பதாகும். ஒரு பாதியேனும் இதில் உண்மை இல்லாமல் இல்லை.
புனிதா போன்ற பள்ளிச்சிறுமிகள் கூட இங்கு நாசமாக்கப்படுவதற்கு காரணம் மது. போதை ஏறியவனுக்கு தாய் யார்? தாரம் யார்? எனத் தெரியாது. பெண்களின் பக்கச் சார்பாக பிந ஆடவர்களின் கவனத்தை ஈர்க்கும் அரைகுறை ஆடைகள் ஒரு காரணம் எனில், ஆண்களின் பக்கச் சார்பாக மதுவைக் கூறலாம். வீதிக்கு வீதி முனைத்துள்ள மதுக்கூடங்கள் இந்த நாட்டைப் பிடித்த பெரும் சாபக்கேடு.
இன்று இஸ்லாமியர்கள் அல்லாத இந்து மதத்தின் தூண்களாக உள்ள மதுரை ஆதீனம் போன்றவர்களே, பர்தா முறையைக் கோருகிறார்கள். டாக்டர் ராமதாஸ், வைகோ, ம.ம.க. கட்சி போன்ற அமைப்புக்கள் மதுவுக்கு எதிரான போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
'நள்ளிரவில் ஒரு பெண் தன்னத்தனியாக எவ்வித அச்சமுமின்றி உலாவரும் நாளே இந்தியா உண்மையில் சுதந்திரம் அடைந்தது என்பதைக் குறிக்கும் நாளாகும்' என்றார் காந்தி.
அறுபது வருடங்களாகியும் அப்படி ஒரு நாள் இன்றும் வரவே இல்லை என்பது தான் வரலாற்றில் பெரும் சோகம்.!

ஆக்கம் : கே.எஸ். முஹம்மது ஷூஐப்
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)