
காரைக்குடி - திருவாரூர் அகல ரயில்பாதை பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும், போதிய நிதி ஒதுக்காததால், 20 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. இந்த ஆண்டுக்கான நிதியும், செலவாகிவிட்டதாக கூறி, கான்ட்ராக்டர்கள் வேலையை நிறுத்திவிட்டனர்.
காரைக்குடி - மயிலாடுதுறை வரை, 187 கி.மீ., தூர மீட்டர் கேஜ் பாதையை, அகல பாதையாக்க, கடந்த 2008ம் ஆண்டில், மத்திய அரசு அறிவித்தது. இதற்கான, ஆய்வு பணிகள் முடிந்து, இவ்விரு நகரங்களுக்கும் இடையே பெரிய பாலங்கள் 18; சிறிய பாலங்கள் 192 அமைக்க, ரூ.711 கோடிக்கு திட்டமதிப்பீடு தயார் செய்தனர். இதற்கு, முதற்கட்டமாக, 2012-ல் ரூ.200 கோடி ஒதுக்கினர்.
ஆனால், அப்போதைய நிலவரப்படி, இப்பணிகள் முடிக்க ரூ.890 கோடி செலவாகும் என மதிப்பிட்டனர்.
மயிலாடுதுறை - திருவாரூர் இடையே 39 கி.மீ., தூர மீட்டர்கேஜ் பாதை, ரூ.136.77 கோடியில், அகல ரயில் பாதையாக மாற்றும் பணி துவங்கின. தற்போது இப்பணி நிறைவு பெற்று, ரயில் போக்குவரத்து நடக்கிறது. காரைக்குடி - திருவாரூர் இடையிலான பணிக்கு, முதற்கட்ட பணியில், எஞ்சிய தொகை போக, 2013-ல் ரூ.20 கோடி மட்டுமே ஒதுக்கினர். இது வரை ரூ.80 கோடி பணிகள் மட்டுமே நடந்துள்ளது. முழுமையாக முடிக்க, கூடுதலாக ரூ.800 கோடி செலவாகும் என ரயில்வே துறையினர் தெரிவிக்கின்றனர்.
காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே பணிகள், 6 கான்ட்ராக்டர்கள் மேற்பார்வையில் நடக்கிறது. இதில் 14 பெரிய பாலங்கள், சிறிய பாலங்கள், கர்டர் அமைக்கும் பணி என தூரத்துக்கு ஏற்றபடி இவர்கள் வேலை செய்து வந்தனர். ஒதுக்கப்பட்ட நிதிக்குரிய பணிகளை செய்து முடித்த நிலையில், இந்த ஆண்டுக்குரிய நிதி இல்லாததால் ரயில்வே துறையினரே, வேலைகளை நிறுத்த சொல்லி விட்டதாக கூறி தற்சமயம் நிறுத்தி வருகின்றனர்.
காரைக்குடி - பட்டுக்கோட்டை வரை ரயில்வே தண்டவாளங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பணிகள் எதுவும் நடக்கவில்லை. பாலம் அமைக்கும் பணிகளும் பெயரளவில் நடந்து அதுவும் நின்றுவிட்டது. காரைக்குடி - திருவாரூர் இடையே அகல ரயில்பாதை திட்டம் நிறைவேறினால் மட்டுமே திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தினர் பயன்பெறுவர். இதுமட்டும் இன்றி, கேரளாவில் இருந்து வேளாங்கண்ணி, நாகூருக்கு செல்வோருக்கும், இப்பாதை மிகுந்த பயன்அளிக்கும்.
ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது; காரைக்குடி - திருவாரூர் ரயில்பாதை பணிகளை இருக்கின்ற நிதியை வைத்து தொடங்கி வைத்துள்ளோம். இங்குள்ள எம்.பி.,க்கள் குரல்கொடுத்தால் மட்டுமே அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவர். இல்லையெனில், புதிய ஆட்சி அமைந்து, நிதி ஒதுக்கிய பிறகு, பணிகள் மேற்கொள்ளப்படும், என்றார்.
“காரைக்குடி - திருவாரூர் அகல ரயில்பாதை மாறுவது வெறும் கணவாகவே இருந்து வருகிறது. ”
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது