அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வித் திட்டத்தின்கீழ் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் மாணவர்களைச் சேர்த்துப் படிக்க வைப்பதில் நாம் நல்ல முன்னேற்றத்தை எட்டினாலும்கூட, தமிழ்நாட்டில் கிராமப்புறப் பள்ளிகளின் கல்வித் தரம் கேள்விக்குறியாக உள்ளதை நாட்டில் உள்ள பள்ளிக் கல்வியின் நிலைமை குறித்து ஆராய்ந்த பிராதம் ஃபவுண்டேஷனின் அசர் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் உள்ள பள்ளிக் கல்வியின் நிலைமை குறித்து பிராதம் ஃபவுண்டேஷனின் 9-ஆவது அசர் ஆண்டறிக்கையை மத்திய திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா வெளியிட்டுள்ளார். இதற்காக நாடு முழுவதும் உள்ள 550 மாவட்டங்களில் சர்வே மேற்கொள்ளப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 500-க்கு மேற்பட்ட பள்ளிகளில் இதற்கான சர்வே எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் பள்ளிக்கல்வி எத்தகைய தரத்தில் உள்ளது என்பதை இந்த ஆய்விலிருந்து புரிந்துகொள்ளலாம்.
தேசிய அளவில் 6-லிருந்து 14 வயது வரை உள்ள 96 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளில் படிக்கச் சேர்ந்துள்ளன. ஐந்தாவது ஆண்டாக இந்த அளவுக்கு மாணவர் சேர்க்கை உள்ளது.
11 வயதிலிருந்து 14 வயது வரை உள்ள பெண் குழந்தைகளில் படிப்பை இடையிலேயே விட்டவர்களின் எண்ணிக்கை 2012-ஆம் ஆண்டில் 6 சதவீதமாக இருந்தது, 2013-ஆம் ஆண்டில் 5.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மாணவர்களின் வாசிக்கும் திறனில் பெரிதும் முன்னேற்றம் இல்லை என்பதையும் அத்துடன் அடிப்படை கணிதத் திறன் பெறுவதற்கும் சிரமப்படுகிறார்கள் என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
தேசிய அளவிலான இந்த அறிக்கையில் தமிழ்நாட்டின் நிலை என்ன என்று பார்ப்போம். தமிழ்நாட்டில் 6லிருந்து 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 0.6 சதவீதம் பேரே பள்ளிப் படிப்பை இடையிலேயே விட்டவர்களாகவோ அல்லது பள்ளியில் சேராதவர்களாகவோ இருக்கின்றனர். தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையும் இந்த சர்வே புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளின் தரம் திருப்திகரமாக இல்லை என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது, ஒன்றாம் வகுப்பில் படிக்கும் 53.4 சதவீதக் குழந்தைகள் தங்களது தாய்மொழியில் எழுத்துகளை அடையாளம் காணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். 34.2 சதவீதக் குழந்தைகள் எழுத்துகளை வாசிக்கத் தெரிந்தவர்களாக உள்ளனர். 10.3 சதவீதக் குழந்தைகள் வார்த்தைகளை வாசிக்கத் தெரிந்தவர்களாக இருக்கின்றனர்.
1.8 சதவீதக் குழந்தைகள்தான் ஒன்றாம் வகுப்புப் பாடப் புத்தகங்களைப் படிக்க முடிகிறது. கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மூன்றாவது வகுப்புக் குழந்தைகளில் 30.7 சதவீதக் குழந்தைகள்தான் முதல் வகுப்புப் புத்தகங்களை வாசிக்க முடிகிறது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மூன்றாவது வகுப்புக் குழந்தைகளில் 25.1 சதவீதக் குழந்தைகள்தான் முதல் வகுப்புப் புத்தகங்களை வாசிக்க முடிகிறது. இதேபோல, அரசுப் பள்ளிகளில் ஐந்தாவது வகுப்பு படிக்கும் குழந்தைகளில் 33.8 சதவீதக் குழந்தைகள்தான் இரண்டாம் வகுப்புப் புத்தகங்களை வாசிக்கும் நிலையில் உள்ளனர். தனியார் பள்ளிகளில் ஐந்தாவது படிக்கும் குழந்தைகளில் 26.3 சதவீதக் குழந்தைகள்தான் இரண்டாம் வகுப்புப் புத்தகங்களை வாசிக்கும் நிலையில் உள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த வாசிப்புத் திறன் குறைந்துள்ளது இந்த ஆவில் தெரிய வந்துள்ளது.
கிராமப்புறப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் படிக்கும் குழந்தைகளில் ஒன்றிலிருந்து 9 வரை உள்ள எண்களைத் தெரியாதவர்களாக 41.8 சதவீதம் பேர் உள்ளனர். ஒன்றிலிருந்து ஒன்பது வரை உள்ள எண்களை அடையாளம் தெரிந்த குழந்தைகள் 40.3 சதவீதம் பேர். 10-லிருந்து 99 வரை எண்களைத் தெரிந்தவர்கள் 17 சதவீதம் பேர். ஒன்றாம் வகுப்பில் படிப்பவர்களில் கழித்தல் தெரிந்தவர்கள் 0.8 சதவீதம் பேர். வகுத்தல் தெரிந்தவர்கள் 0.1 சதவீதம் பேர்.
கிராமப்புற அரசுப் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பில் படித்து கழித்தல் கணக்குத் தெரிந்தவர்கள் 17.9 சதவீதம் பேர். தனியார் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பில் படித்து, கழித்தல் கணக்குத் தெரிந்தவர்கள் 19.9 சதவீதம் பேர். அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பில் படித்து, வகுத்தல் கணக்குத் தெரிந்தவர்கள் 14.6 சதவீதம் பேர். தனியார் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பில் படித்து வகுத்தல் கணக்கைப் போடத் தெரிந்தவர்கள் 12.1 சதவீதம் பேர். அரசுப் பள்ளிகளைப் பொருத்தவரை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தக் கணிதத் திறன் அதிகரித்துள்ளது. அதேசமயம், தனியார் பள்ளிகளைப் பொருத்தவரை இந்தக் கணிதத் திறன் குறைந்துள்ளது.
கிராமப்புற அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளில் 11.7 சதவீதத்தினரும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளில் 10.7 சதவீதத்தினரும் டியூஷன் படிக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளில் 22.4 சதவீதத்தினரும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளில் 22.2 சதவீதத்தினரும் டியூஷன் படிக்கிறார்கள்.
இந்த சர்வே நடத்துவதற்காக பள்ளிகளுக்குச் சென்றபோது, பள்ளிக்கு வருகை தந்த மாணவர்கள் 91.3 சதவீதம். பள்ளி வந்த ஆசிரியர்கள் எண்ணிக்கை 88.4 சதவீதம்.
கிராமப்புறங்களில் 70.7 சதவீதப் பள்ளிகளில் விளையாட்டு அரங்குகள் உள்ளன. 64.3 சதவீதப் பள்ளிகளில் மட்டுமே சுற்றுச்சுவர் உள்ளது. 11.8 சதவீதப் பள்ளிகளில் குடிநீர் வசதி செய்யப்படவில்லை. 8.9 சதவீதப் பள்ளிகளில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தபோதிலும் அங்கு குடிநீர் இல்லை. 79.3 சதவீதப் பள்ளிகளில் மாணவர்களுக்கு குடிநீர் கிடைக்கிறது.
5.4 சதவீதப் பள்ளிகளில் கழிப்பறை வசதி கிடையாது. 17 சதவீதப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இருந்தபோதிலும்கூட, கழிப்பறை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 77.6 சதவீதப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் நிலையில் கழிப்பறைகள் உள்ளன. 17.6 சதவீதப் பள்ளிகளில் மாணவிகளுக்கு என தனிக் கழிப்பறை வசதி இல்லை. 9.9 சதவீதப் பள்ளிகளில் மாணவிகளுக்கு என தனி கழிப்பறை வசதி இருந்தும், அந்தக் கழிப்பறைகள் மூடப்பட்டு இருக்கின்றன. 5.4 சதவீதப் பள்ளிகளில் மாணவிகளுக்கு தனிக்கழிப்பறை வசதி இருந்தும், அதைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
10.9 சதவீதப் பள்ளிகளில் நூலகம் இல்லை. 23.1 சதவீதப் பள்ளிகளில் நூலகம் இருக்கிறது. ஆனால், சர்வே நடத்தச் சென்ற நாளில் நூலகத்திலிருந்து மாணவர்கள் புத்தகத்தை எடுத்துப் பயன்படுத்துவதைப் பார்க்க முடியவில்லை. 66 சதவீதப் பள்ளிகளில் மாணவர்கள், நூலகத்தைப் பயன்படுத்தியதைப் பார்க்க முடிந்தது. 99.6 சதவீதப் பள்ளிகளில் சமையலறையில் மதிய உணவு சமைக்கப்பட்டது.
சர்வே நடத்துவதற்காக பள்ளிக்குச் சென்ற போது, 100 சதவீத மாணவர்களும் மதிய உணவை அருந்தியதைப் பார்க்க முடிந்தது என்றும் அந்த அறிக்கையில் தமிழக கிராமப்புறப் பள்ளிகளின் நிலைமை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அசர் அறிக்கை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களைப் பள்ளிகளில் சேர்ப்பதுடன் அரசின் பொறுப்பு முடிந்து விடுவதில்லை. அந்த மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கச் செய்ய வேண்டியது அவசியம். குறிப்பாக, கிராமப்புறப் பள்ளிகளின் மேம்பாட்டில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அதற்கு, அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளும் முக்கியம். அத்துடன், மாணவர்களுக்கு கற்பிக்கும் தரமும் முக்கியம். கற்றலில் இனிமையை ஏற்படுத்தி விட்டால், பல பள்ளி மாணவர்கள் படிப்பை இடையிலேயே விட்டு விட மாட்டார்கள்
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது